Monday 14 September 2009

கொலைக் களத்தில் கோல மயில்.....


மாஞ்சோலை ஒன்றிலே
மாமர நிழலின் கீழ்
மன்னவனின் மடியிலே
மயிலொன்று படுத்திருக்கு.....

மாங்கனிகள் பாரத்தில்
கிளைகள் எல்லாம் நிலம் தடவ....

மயக்கும் விரல் கணையால்
மடி கிடந்த பொன்மயிலின்
மென் ஸ்பரிசம் அவன் தடவ...

ச்சீ.. வேணான்டா....
கையை எடு....
நான் வீட்டை போப்போறன்....

இல்லை..இல்லை
நாளைக்கு வயல் வேலை
நான் வர மாட்டேன்டி..
அதனாலே இன்று
உன்னை தொட்டுவிடப் போறேன்டி.....

இல்லையடா... செல்லம்
இது வேண்டான்டா... இப்போ
நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால்
நாம் வீட்டைபோவோம் இப்போ...

சரியடி போவோம்....
காலையிலே எனக்கு
என்ன சாப்பாடு கொண்டருவாய்
நான் மண்வெட்டி பிடிக்கமுதல்
என்னை மகிழ்விக்க என்னதருவாய்....

அடி....வாங்குவாய்...! ஆசையைப் பாரு....
அம்மா அப்பத்துக்கு போட்டிருக்கா
காலை அப்பம் கொண்டு வாறேன்டா
அதைச் சாப்பிட்டுவிட்டு
ஒழுங்காய் வயலுக்குப் போடா...!

இது நடந்த இடம் கிளிநொச்சியில்
அழகான ஓர் மாலை.....
செஞ்சோலை அருகிருந்த
செழிப்பான மாஞ்சோலை....

இது கிளிநொச்சிக்கு
செல்லடிக்கத் தொடங்க முதல்
தித்தித்த ஓர் காதல்....
மழைபோல் செல்கள் விழத்தொடங்க
சிதறிவிட்ட ஓர் காதல்.....

இந்த ஜோடிப் புறாக்களும்
குடும்பத்துடன் விடாமல் தாம் பறந்து
விஸ்வமடு... உடையார்கட்டு
சுதந்திரபுரம்.... தேவிபுரம்...
புதுக்குடியிருப்பு.... முள்ளிவாய்க்கால் வரை....
வீழ்ந்திருந்த எம் பிணங்கலெள்ளாம்
விடாமல் பார்த்ததினால்
அவர் காதல் கோட்டைகளில்
கருகிய பிணக்குவியல்....

இறுதியில்...
சுதந்திரச் சுவாசம் போய்
மரணத்தின் வாசம்....
துப்பாக்கி முனைகளின் முன்
முட்கம்பி வன வாசம்......

கூட்டத்தில்
அந்தக் கொலைக் களத்தில்.....
பிரித்தெடுத்த வலையத்தில்
அந்தப் புறாக்கள் சந்தித்தும்....
பேச்சு அனுமதியும்
பெற்றிராத அடிமைகளாய்.....

அவளுக்கு துப்பாக்கி முனையில்
தனியறையில் விசாரனை.....
அறையில் கதறல் சத்தம்
அவனுக்குச் சொல்லியது
அந்தச் சோகக்கதை.....

அரை மணி நேரத்தின் பின்
அவழ்ந்த கூந்தல்....
அழமுடியாக் கண்கள்...
வெளிறிய உதடுகள்....
வேகமிழந்த அந்த மானின் நடை....

வெறும் நிலத்தில் வந்து அமர்ந்தாள்
அழாத முகத்துடன்.......
அவள் அங்கே அமர்ந்திருக்க
அடுத்த விசாரணைக்கு.
அழைப்பு அவனுக்கு.....

அங்கே அலறல் சத்தமில்லை
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்......


இளங்கவி.....

Monday 31 August 2009

பாலைவன ரோஜா...

ஒரு தூய நட்புக்காக...

நம் வாழ்விழந்த சோகத்தில்
வாயடைத்து நின்றேன்......
அழியும் நம் இனத்துக்காய்
நடு வீதிக்கு சென்றேன்.....
அந்த தருணங்கள்
என் வாழ்வின் ரணங்களாய்.....
எப்போதும் சுட்டெரிக்கும்
பாலை வனங்களாய்........

அந்தப் பாலைவனத்தினிலே
சோககீதம் பாடும்
ஓர் சோலைக் குயிலாக.....
திசையேதும் தெரியாமல்
திசைமாறிப் பறக்கின்றேன்....

அந்த நெருப்பு மண்தரையில்
பட்டுவண்ண ரோஜாவொன்று.....
நட்பெனும் நிழல் தேடி
நான் பறக்கும் திசை நோக்கி
நட்புடன் சிரிக்கிறது....

சுட்டெரிக்கும் சூரியன்
விட்டெறியும் கதிர்களினால்....
தொட்டாலே தீப்பற்றும்
சுட்டெரிக்கும் மண் தரையில்......
வேரூன்றித் தவிக்கும்
அந்த அழகான பூச்செடிக்கு....
நட்பெனும் கரம் நீட்டி
நான் கொடுத்தேன் சிறிது நிழல்.....

நெருப்பு வலையத்தில்
நின்று பூத்தாலும்......
எந்தன் நிழ(மட)ல் கண்டால்
அது நித்தமும்
மலர்ந்து நிற்கும்.....

என் பிரியமான தோழியவள்
பாலைவன ரோஜாதான்.....
என் நட்புப் பூங்காவில்
பளிச்சிடும் ஓர் ரோஜாதான்.....
என் மனதில் நண்பியாய்
நான் நட்டுக்கொண்ட ரோஜாச்செடி....
அது நாள்தோறும் மலர்ந்திருக்க
நான் வணங்கிடுவேன் இறைவனடி....


இளங்கவி

Saturday 29 August 2009

பிணக் காடுகளில்.....


பிணக் காடுகளில்
பேய்களின் ஊர்வலம் நடக்க.....
நாம் பிறந்த தேசம்
நாயின் வாயில்
கேவலமாய்க் கிடக்க.....

ஈழத்து வளங்களெல்லாம்
எதிரியின் காலடியில் நசுங்க....
எம் உறவின் எலும்புகளை
அவன் நாய்கள் திண்டு ருசிக்க....

ஆடுகிறான் பேயாட்டம்
அதை அடக்க இல்லை ஓர் கூட்டம்
உலகத்தின் அசிங்க அரசியலில்
அழிந்தது எம் உயிரோட்டம்....


அன்றொரு நாள் இரவில்....

ஓலைக்குடிசை இடுக்கினிலே
ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு
மயங்கிய பூவினிலே
மது அருந்தும் வன்னிவண்டு....

இன்றைய இரவினிலே.....

இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே
கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு
எதிரியின் கோரப்பசிக்கு
சிதையும் நம் மலர்கள் இன்று.....
இரவின் அமைதியை
நிரப்பும் அழுகுரல்கள்....
இந்தக் கொடுமைகலைக் கொன்றொழிக்க
எழுவாரா நம் புலிகள்....

வன்னியில் இரத்தத்தை
வேர்களால் உள் வாங்கி....
செந்நிறப் பழங்கள் தரும்
நம் விலாட்டு மாமரங்கள்.....

நம் சாம்பல்மேட்டில் ஊர்க்குருவி
தனியாகப் படுத்துக்கொண்டு
ஆள் அரவமின்றி
அமைத்தியாய் தூங்கிறது....

அன்று அறுந்த தொப்புள்கொடி.....
இன்று அறுக்கப்படும் நம் கழுத்து.......
எதிரியின் கோரப் பசிக்கு
குதறப்பட்ட பெண் மார்பகங்கள்........
அத்தனையும் சேர்த்து
அறுசுவை உணவாக.......
ஆளில்லா நம் நிலத்தில்
அனுபவிக்கும் காட்டு நரி....

இரவின் ராச்சியத்தில்
ஈழத்து ஆன்மாக்கள்.......
புனிதத்தின் மேடுகளில்
புன்னகைக்கும் பூட்ஸ் கால்கள்.......
ஆண்மையின் அடிமேட்டில்
அசிங்கமாய் அவன் கைகள்......
இதைக் கேட்டும் மகிழ்ந்திடுவார்
தமிழராம் சில பேர்கள்......

அரக்கக் கரங்களில்
அழுது நிற்கும் நம் தேசம்......
இதை நீக்க யார் வருவார்
என்று நீங்கும் நம் தோஷம்........

எதிரி எங்கள் கோட்டையை
பெருந்தணலில் எரித்தாலும்
அத் தணலையே சுவராக்கி
நம் தேசத்தை கட்டிடுவோம்.....


இளங்கவி

Saturday 15 August 2009

செஞ்சோலைக் குயில்கள்.....


புலியின் கோட்டையிலே
பூத்த சிறுமலர்கள்.....

பொசுங்கி விட்ட பின்பும்
மனதில் பூத்து நிற்கும்
கொடி மலர்கள்....

அவர் செஞ்சோலையில் வளர்ந்த
சிரித்து நின்ற இளந்தளிர்கள்

செத்து நம் சரித்திரத்தில்
இடம்பிடித்த இளம் குயில்கள்....

வாழ்க்கையின் வசந்தத்தை
ஏக்கத்துடன் பார்த்திருந்த....
வெண்பனியில் தவண்டுவரும்
நம் ஈழத்துப் பென்குயின்கள்....

வணக்கத்துடன் சூரியன்
கிழக்குவாசல் வந்துவிட.....
செஞ்சோலைப் பூக்கலெல்லாம்
சிறிதாக மலர்ந்துவிட....
வளமையான பொழுதென்று
வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க....
வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று
தெரியாத தேவதைகள்......

மகிந்தவின் கட்டளைக்கு
எமன்கூட பயந்துகொண்டு
வாகனம் மாற்றி
ஏறுகிறான் கிஃபிரினிலே.....

செஞ்சோலைமேல் பறந்து
பூஞ்சோலையைக் கருக்க
போட்ட குண்டு நாலில்
பிணக்குவியல்கள் பல இடத்தில்....

உலகமே அன்று
வாய் பொத்தி நின்று பார்க்கிறது.....
நாம் அழுத அழுகுரல்கள்
நம் காதில் மட்டுமே கேட்கிறது....
அவர் பிணம் புதைக்கும் கல்லறைக்கோ
அவர் சாம்பல்தான் கிடைக்கிறது....
இதைப் பார்த்த தமிழினமோ
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிறது.....

விழித்திருந்தால் கண்ணீராய்.....
தூக்கத்திலே கனவுகளாய்.....
உணவுண்ணும் போதினிலே
தொண்டையில் சிக்கும் முள்ளுகளாய்....
உன் நினைவோ என்றென்றும்; நம்
நெஞ்சினிலே தைக்கிறது; இந்தக் ....
குஞ்சுகளை நினைத்துவிட்டால்
நம் உடம்பு பஞ்சாக எரிகிறது......

இளங்கவி

Friday 24 July 2009

மழை....



மனதைத் தாலாட்டும்
இயற்கையின் இன்பம் நீ......

மகிழ்வான சிறுவயதின்
என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ.....

சிறுவனாய் நான்.....

விளையாடி வரும்போது
வெப்பமாகும் என் தேகம்.....
மேலிருந்து நீ வந்து வந்து
குளிரவைப்பாய் என் தேகம்....
என் சூடான சுவாசமும்
சில்லென்று குளிர்ந்துவிடும்....
அதை இன்றும் நினைத்தாலும்
ஜில்லென்று சுகம் தரும்....

இளைஞனாய் நான்......

தெருவோரம் அமர்ந்து
தேடுவேன் என் பேரழகை....
திடீரென்று நீ வருவாய்
சினத்தையும் நீ தருவாய்.....

அந்த நேரம் என்
அழகுச்சிலை வருவாள்...
நீ துளிகளாய் அவள் முகத்தினிலே
தொட்டதுமே ஒட்டிடுவாய்....
ஒட்டிய துளியொன்று
அவள் மூக்குவளி இறங்கிவந்து
அவள் மேல் உதட்டை தொட்டுவிட....
அவள் அதை உள்ளிழுத்து
என் பக்கமாய் ஊதிவிட....
அப்போது அவள்
உதடுசொல்லும் ஜாலத்தில்
என்னுயிரைக் கொடுத்தவன் நான்....
அந்த மொழியை இன்றுவரை
என் இதயத்தில் ரசிப்பவன் நான்........
அதனாலே இன்றுவரை உன்னை
ரசிக்கும் கலைஞன் நான்.....

ஆனால் உன்னை எனக்கு
இப்பொது ஓரளவும் பிடிக்கவில்லை...

ஏனென்று கேட்காதே
எப்படிப் பதில் சொல்வேன்....
ஏங்கி நிற்கும் நம் உறவுகளின்
எதிர்காலம் என் சொல்வேன்....

நம் அனைத்து உறவுகளும்
முகாமில் அடைந்திருக்க
அங்கே ஒரு நாளேனும் உன் வருகை
உன்னை அருவருக்க வைக்கிறது.....

அன்றோ நீ எங்கள்
அழகுக்கு அழகு தந்தாய்

இன்றோ நீ இங்கே
அசிங்கமெல்லாம் கூட்டிவந்து
எங்களை அவலப்படுத்துகிறாய்......

பல்லாயிரம் கிருமிகளை
நம் பாதங்களில் சேர்க்கின்றாய்....
படுக்கும் இரவினிலும்
நம்மை பாடாய் படுத்துகிறாய்....

உன் தொல்லை போதும்
நாம் அழைக்கும் வரை
வர வேண்டாம்.....
அழையாத விருந்தாளியாய்
எங்களுக்கு அவலத்தை
தர வேண்டாம்.....

இளங்கவி

Tuesday 14 July 2009

என் இனிய முதலிரவு....



என் வலைப்பூவில் சிக்கிய
வண்ணத்துப் பூச்சியவள்....
என் நெஞ்சில் நிறங்கள் பலதூவி
நிறக்கோலம் போட்ட மயில்.....

வகை வகையாய் பேசி
என் நெஞ்சில் தேற்றினாள்....
வருவேன் வருவேனென்று
என் நாளும் எனை ஏமாற்றினாள்.....

வலைப்பூவில் முத்தங்களை
வரிசையாய் வழங்கினாள்......
நிஜத்திலே வேண்டுமென்றால்
கொஞ்சம் பொறு என்று சீண்டினாள்....

பல நாட்கள் முயற்சியில்
சந்திக்க ஏற்பாடு.....
அதனால் மறுத்துவிட்டேன்
என் வீட்டிலே சாப்பாடு....

விரைந்த என் வாகனம்
ஓர் விடுதிமுன் நிற்கிறது.....
அவள் வரவுக்காய் ஏங்கி
என் நெஞ்சோ தவிக்கிறது.....!
என் MP3 ல் அவள் வருவாளா?
பாடலும் ஒலிக்கிறது.....
அதை அமைதியாய் கேட்டு
என் மனமோ ரசிக்கிறது.....

ஏழு மணியிலிருந்து
நடு இரவும் வந்திட....
தூக்கமோ என் கண்ணை
முழுதாக மூடிட....

டொக் டொக்.. கதவோசை
காதில் கேட்டுவிட.....
அவசரமாய் ஓடிச்சென்று
என் கையோ கதவை திறந்துவிட.....
ஒன்பதுமணிக்கு முன் நீங்கள்
அறையை விடவேடும்....
இப்போ நேரம் எட்டரை
விரைவில் அறைத்திறப்பு தரவேண்டும்....

ஆகா...! அப்பத்தான் உணர்ந்தேன்
நான் அடிமுட்டாள் பயலென்று....
தனிமையிலே அனுபவித்தேன்
அவளின்றி முதலிரவொன்று.....

அவள் நினைவில் பல நாட்கள்
என் தூக்கம் தொலைத்திருந்தேன்.....
நேற்றுரவு அமைதியான இரவொன்றை
அவளால் பெற்றிருந்தேன்....
என் வாழ்க்கையில் மறக்காத
ஓர் இனிய முதலிரவு....
வலைப்பூவின் கிளியொன்று
பரிசளித்த ஓர் இரவு.....!

இளங்கவி

Saturday 4 July 2009

மரங்கொத்தி பறவை...


என் மரம் போன்ற இதயத்தை
இன்ப வலி தந்து
விழியெனும் கோடாலியால்
வெட்டிப் பிளந்தவள்......

அவளைச் சந்தித்தேன்
சரித்திர நிகழ்வொன்றில்
அங்கே சாயாத இச்சரித்திரத்தை
ஒரு நொடியில் சாய்த்துவிட்டாள்.....

எண்ணூறு பாகை வெப்பத்தை
தன் விழிகளினால்
என் விழிக்குள் பாய்ச்சி
என் இரும்பு இதயத்தை
ஒரு நொடியில் உருக்கிவிட்டாள்...
அந்த உருகிய இதயம்
இன்னும் ஒட்டவில்லை...
என் உள் நின்று ஓடி
என்னை உருமாற வைக்கிறது...
குளிர் நீரில் குளித்து
குளிரப் பார்க்கிறேன்...
ஆனால் கொதி நீரில் குளித்ததாய்
கொதித்துப் போகிறேன்....

நிமிடதினில் மாறும்
தமிழர் சரித்திரம் ஒருபக்கம்....
ஒரு நொடியில் நீ மாற்றிவிட்ட
என் சரித்திரமோ மறுபக்கம்....
பல கவலை மனதில் நிற்க
இன்னுமோன்றை கூட்டிவிட்டாய்.....
பகலிலும் என்னை
பாதியாய் தூங்கவைத்தாய்...

தமிழன் கவலை சொல்ல.....
மக்கள் மனங்களை வெல்ல.....
மறக்காமல் என் கடமையை
மனித நேயத்துடன் செய்கின்றேன்.....
இருந்தும் போகும இடமெல்லாம்
உன் பார்வையையும் தேடுகிறேன்...

வந்திடடி என் மர(ன)ங்கொத்தி
உன் பார்வை தந்திடடி....
என் உரிமைப் போருக்கு
முழுப்பலம் நீ தந்திடடி....

இளங்கவி......